தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியானது. இதையடுத்து, மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் 2-வது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார்.
இந்த படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்திற்காக History of Violence படத்தின் உரிமையை முறையாக கைப்பற்றி அதில் சில மாற்றங்களை செய்து திரைக்கதை எழுதியுள்ளார் லோகேஷ். மேலும், தன்னுடைய முந்தைய படங்களின் தொடர்பான Lokesh Cinematic Universe கனெக்ஷனையும் தொடர்புப் படுத்தியுள்ளார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன. இப்போது பாடல் காட்சி ஒன்று பிரம்மாண்டமான செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ திரைப்படத்தையும் ‘விக்ரம்’ திரைப்படத்தையும் இணைக்கும் வகையில் மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஹரிஷ் உத்தமன் ‘நல்லா இருக்கும் இல்லையா’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.