ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்திற்கான ப்ரீ புக்கிங் இப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்திற்கு பிரி புக்கிங்லேயே இதுவரை தமிழகத்தில் 8 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், இதுவரை பல மொழிகளில் 160-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்போது ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது ஜெயிலர் திரைப்படம். அண்மையில் ஜெயிலர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் காவாலயா பாடல் தான் இப்போதைய இணைய உலகின் டிரெண்டிங் சாங். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சுனில், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரெடின் கிங்ஸ்லி என பலர் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்காக இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் ப்ரீ புக்கிங் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புக்கிங் விவரங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது. தற்போது வரை தமிழ்நாட்டில் ப்ரீ புக்கிங்கில் ஜெயிலர் திரைப்படம் ரூ. 8 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், உலகம் முழுவதும் வரும் 10ஆம் தேதி வெளியிடப்படுகிறது. ஜெயிலரை திரையில் காண ரஜினி ரசிகர்கள் மிக ஆவலோடு காத்திருக்கின்றனர்.