இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் கார்த்தி இதுவரை ஏற்காத வித்தியாசமான வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’பருத்தி வீரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கார்த்தி, வித்தியாசமான வேடங்களில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் கிராமிய மனம் வீசும் விருமன் திரைப்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதற்கிடையே, வந்தியத் தேவனாக கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளது.

இந்த நிலையில் ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் கார்த்தி. அதில், இதுவரை கார்த்தி ஏற்காத புதிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், இதற்கான ஒத்திகை மற்றும் பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் தரமான படைப்புகளை வழங்கி வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சியில் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்து படக்குழுவினரின் பாராட்டை பெற்றிருந்தார் கார்த்தி. அதுபோலவே இத்திரைப்படத்திலும் தனது திறமைகளை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.