ஜே ஜே படத்தில் அறிமுகமானவர் கேஜிஎப் புகழ் மாளவிகா அவினாஷ். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சில முக்கிய தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மாதவன் நடித்த ஜே ஜே படத்தில் மூலம் அறிமுகமானவர் மாளவிகா அவினாஷ். இவர் ஜேஜே படத்தில் நாயகியின் சகோதரியாக நடித்திருப்பார். அதன் பின்னர் ஆதி, பைரவா, கைதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் கூட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சின்னத்திரையிலும் அண்ணி, சிதம்பர ரகசியம், ராஜ ராஜேஸ்வரி, அரசி என்று பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். இப்படி தொடர்ச்சியாகப் பல கதாபாத்திரங்களில் வருபவர் மாளவிகா அவினாஷ். 2k கிட்ஸுக்கு எளிதாகப் புரிய வேண்டும் என்றால் கேஜிஎஃப் படத்தில் நடித்தவர். அதாவது அதில் இரண்டு பாகங்களிலும் கதை கேட்கும் நெறியாளராக நடித்தவர் இவர் தான்.
நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் மாளவிகா அவினாஷ். கடந்த 2013இல் பாஜகவில் இணைந்த அவர், அதன் பின்னர் சினிமாவுக்கு நடுவே தொடர்ச்சியாகக் கட்சிப் பணிகளையும் செய்து வருகிறார். இதற்கிடையே இவர், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் படுக்கையில் படுத்தபடி சிகிச்சை பெறும் படத்தையும் அவரே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருந்தால் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் என்னைப் போன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மாளவிகா அவினாஷ் Migrane எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த ஒற்றைத் தலைவலி என்பது இப்போது மக்களிடையே ஏற்படும் மிக மோசமான தலைவலிகளில் ஒன்றாகும். நீரிழப்பு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிகரிக்கும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். ஒற்றைத் தலைவலி அதிகரிக்கும் போது, குமட்டல், தலைச்சுற்றல், எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். இது வழக்கமான தலைவலியைக் காட்டிலும் அதிக வலியை ஏற்படுத்தும். நம்மை பலவீனமாகவும் சோர்வாகவும் உணர வைக்கும். கடுமையான வலி, குமட்டல், வாந்தி, அசௌகரியம் ஆகியவை இதன் அறிகுறியாகும். ஒற்றைத் தலைவலி என்பது உலகளவில் 148 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கும் ஒரு பொதுவான பாதிப்பாகும். பொதுவாக ஆண்களை விடப் பெண்களுக்கு இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.