நடிகர் ரஜினிகாந்த் பேருந்து நடத்துநராக இருந்தபோது, அவருடன் ஓட்டுநராக பணியாற்றியவர் தான் ராஜ் பகதூர். இன்று வரை இருவருமே நண்பர்களாக தான் உள்ளனர். ஒரு பக்கம் முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நண்பர்களாக இருந்தாலும் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெங்களூரு நபர்களும் ரஜினிக்கு நண்பர்கள்தான்.
இந்நிலையில், ஜெயிலர் திரைப்பட வெளியீட்டின் போது ரஜினி குறித்த சில ரகசியங்களை நண்பர் ராஜ் பகதூர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “ரஜினிகாந்த் அதிக அளவில் தியானம் செய்வார். அடிக்கடி இமயமலைக்கு சென்று பல முனிவர்களை சந்திப்பார். அங்குள்ள முனிவர்களும், சித்தர்களும் ரஜினிக்கு இளமையாக இருக்க மருத்துவ தாவரங்களின் வேர்களை கொடுப்பார்கள். அதை ஒரு முறை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு சக்தி கிடைக்கும். அதனால்தான் 73 வயதாகும் ரஜினிகாந்த் இன்று 23 வயது இளைஞரை போல் இருந்து வருகிறார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”ஒவ்வொரு முறையும் ரஜினிகாந்த் பட வெளியீட்டின் போது இமயமலைக்கு சென்று பூஜை செய்வார். உடல்நலம் பாதிப்பால் கடந்த 4 ஆண்டுகளாக அவரால் இமயலைக்கு செல்ல முடியவில்லை. இந்த முறை அவர் சென்றிருக்கிறார். என்னையும் அழைத்தார். ஆனால், வடமாநிலங்களில் அதிக மழை பெய்து வருவதால் அவரையே போக வேண்டாம் என அறிவுறுத்தினேன். ஆனால், அவர் எந்த முடிவு செய்தாரோ அதை செய்யும் பழக்கம் அவருக்கு இருக்கிறது” என்றார்.