ஷங்கர் இயக்கும் படத்தில் சூர்யாவோடு கேஜிஎஃப் பட நாயகன் யாஷ், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி சினிமா ரசிகர்களை பரபரக்கச் செய்திருக்கின்றன.
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் படமாக எடுத்துள்ள நிலையில், மதுரை எம்.பியும் சாகித்ய அகாடமி விருதுபெற்ற சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக வேள்பாரி நாவலை படமாக எடுக்கும்படியும் கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. அதற்கு செவி சாய்க்கும் வகையில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் வேள்பாரி கதையை படமாக்க இருப்பதாகவும், அதில் பாரியாக நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதனை உறுதிபடுத்தும் வகையில் கார்த்தியின் விருமன் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் “எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் ஒரு சுவாரஸ்ய பயணம் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும்” என்று நடிகர் சூர்யா சூசகமாக தெரிவித்திருந்தார்.
முன்னதாக ரன்வீர் சிங்கை வைத்து ஷங்கர் பான் இந்தியா படத்தை இயக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் வீரயுக நாயகன் வேள்பாரி கதையை மூன்று பாகங்களாக எடுக்கப்பட இருப்பதாகவும், இதில் சூர்யாவோடு கேஜிஎஃப் பட நாயகன் யாஷ், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி சினிமா ரசிகர்களை பரபரக்கச் செய்திருக்கின்றன.
இதுபோக படத்தின் முதல் பாக பணிகள் 2023ஆம் ஆண்டு ஜூன் மாத வாக்கில் தொடங்கப் போவதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக வேள்பாரி படத்தை சூர்யாவின் 2d எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது என்பதும் கூடுதல் தகவலாக இருக்கிறது.