பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இறுதிப்போட்டி வரை முன்னேறி டைட்டிலையும் தட்டிச் சென்றுள்ளார் அசீம்.
ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. விஜய் டிவியில் கடந்த மூன்று மாதங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளராக வலம் வந்த அசீம் தான் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். அவருக்கு பிக்பாஸ் டிராபி, ரூ.50 லட்சத்துக்கான காசோலை மற்றும் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. இவர், கன்னியாகுமரி மாவட்டம் ஆளூரை சேர்ந்தவர் ஆவார். விஜே ஆக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்த அசீம், பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 2008ஆம் ஆண்டு தொகுப்பாளராக சேர்ந்து பணியாற்றினார். தன் தூய தமிழாலும், பேச்சுத்திறமையாலும் ரசிகர்களை ஈர்த்த அசீமுக்கு பின்னர் சீரியலில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் சீரியலுக்குள் நுழைந்தார்.
இதையடுத்து பிரியமானவள், தெய்வம் தந்த வீடு போன்ற தொடர்களில் நடித்த இவர், பகல் நிலவு சீரியல் மூலம் தான் மிகவும் பேமஸ் ஆனார். அந்த தொடரில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அசீம். அப்போது இவரைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அசால்டாக அடுத்தகட்டத்திற்கு நகர்ந்தார் அசீம். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர் சையத் சோயா என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ரயான் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதேநேரம் இருவாரத்துக்கு ஒருமுறை மகனை சந்தித்துக் கொள்ள அசீமுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மகன் ரயான் மீது அதீத அன்பு கொண்டிருந்த அசீம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதே தன் மகனுக்காக தான் என்று கூறியிருந்தார். அசீமுக்கு பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்துகொண்டாலும், அவருக்கு கடந்த சீசனிலேயே வாய்ப்பு கிடைத்தது. 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்வதற்காக குவாரண்டைனில் கூட இருந்தார் அசீம். ஆனால் அந்த சமயத்தில் அவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அசீம், ஆரம்பத்தில் விளையாடிய முறை அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. யாருக்கும் மதிப்பளிக்காமல், சக போட்டியாளர்களை ஒருமையில் பேசுவது, தரக்குறைவாக பேசுவது, அதிகம் தற்பெருமை பேசுவது என இவர் செய்த செயல்கள் கமல்ஹாசனையே கடுப்பாக்கியது.
இதனால், இரண்டு முறை அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தது. பின்னர் போகப்போக மற்ற போட்டியாளர்கள் பெரியளவில் சோபிக்காததால், அசீம் சண்டை போடுவதும் நன்றாக தான் உள்ளது என்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். அதனால் அவருக்கு வாக்களித்து இறுதிப்போட்டி வரை கொண்டு சென்ற மக்கள், இறுதிப்போட்டியிலும் அவரை ஜெயிக்க வைத்துவிட்டனர். இதற்கிடையே, அசீமின் வெற்றிக்கு பின் கமலின் அரசியல் தலையீடு இருக்குமோ என்று அரசியல் விமர்சகர்கள் சந்தேகிக்கின்றனர். பிக்பாஸ் போட்டியாளரான விக்ரமனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரடியாக பிரச்சாரம் செய்தார். திருமாவளவனுடன் கமல்ஹாசன் இதுவரை அரசியல் கூட்டணியில் ஈடுபட்டதில்லை. இந்நிலையில், விக்ரமன் வெற்றி பெறும் பட்சத்தில், அது திருமாவுக்கு சாதகமான அரசியல் நகர்வாக இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, அசீமின் வெற்றிக்கு கமலின் செயல்பாடு ஒரு காரணமாக இருக்குமோ என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.