சிலம்பரசன், வல்லவன் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மற்றொரு படத்தை இயக்க உள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார்.
டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, தனது தந்தையை போல் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருகிறார். சிறுவயதில் இருந்தே நடித்து வரும் சிம்பு, நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, நிதி அகர்வால் என பல்வேறு நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார். உடல் எடை அதிகரித்ததன் காரணமாக சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சிம்பு, தற்போது ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறிய பின் மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார்.

தற்போது இவர் நடிப்பில் ’பத்து தல, கொரோனா குமார்’ ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில், ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நேற்று (செப்டம்பர் 15 ) திரையரங்குகளில் வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், சிலம்பரசன், வல்லவன் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மற்றொரு படத்தை இயக்க உள்ளதாக ஒரு விளம்பர நிகழ்ச்சியில் சிம்பு அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பத்து கதைகள் தயாராக உள்ளதாகவும், அதில் எதை தேர்வு செய்வது என்று முடிவு செய்யவில்லை என்றும் சிம்பு தெரிவித்து இருந்தார். அது மட்டுமல்லாமல் தனது 50-வது படத்தை முடித்த பிறகு எந்த கதை என்று தேர்வு செய்து திரைப்படத்தை இயக்க ஆரம்பித்து விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிம்பு இயக்கிய வல்லவன் படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிம்பு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பால், மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2006 காலகட்டத்தில் வல்லவன் திரைப்படம் ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தாலும், தற்போது அந்த திரைப்படத்திற்கு கடும் விமர்சனங்கள் மற்றும் கலவையான விமர்சனங்கள் இளைஞர்களிடையே எழுந்து வருகிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது சிம்புவிற்கு இந்த படத்தை இயக்குவது மற்றும் மக்களை திருப்திப்படுத்துவது சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க சிம்புவின் ரசிகர்கள் அவரை மீண்டும் இயக்குனராக பார்க்கப் போவதால் பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.