தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்களில் முக்கியமானவர் நடிகர் ராஜ்கிரண். இவரின் திரை வாழ்க்கை ஒரு எதிர்பாராத நிகழ்வு என்றே கூறலாம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை தற்போது பார்க்கலாம்.
தொடக்க காலத்தில் சினிமா தயாரிப்பாளர் அலுவலங்களில் ஆபிஸ் பாயாக வேலை செய்தவர் ராஜ்கிரண். இவர், அப்போதே சினிமாவின் நுணுக்கங்களை கரைத்து குடித்திருந்தார். எந்த படம் வெல்லும். எந்த கதை சரியாக ஓடாது, எந்த காட்சிக்கு கைத்தட்டு கிடைக்கும் என்பதில் தெளிவாக இருந்தவர். இதை தொடர்ந்து ராஜ்கிரண் சினிமாவில் தயாரிப்பாளராக வந்த போது அவருக்கு கதையை தேர்வு செய்வதில் கடினமாக இருந்தது இல்லை. அவரின் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் நல்ல வசூலை பெற்றது. அப்போது ஒரு படம் ராமராஜனை வைத்து தயாரிக்கலாம் என ராஜ்கிரண் முடிவெடுத்தார். அப்படத்திற்கு இயக்குனர் தேடலில் இருந்தார். அந்த நேரத்தில் விசுவிடம் உதவி இயக்குனராக இருந்த கஸ்தூரி ராஜாவின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.
நடிகரான ராஜ்கிரண்…
அவரை கதை சொல்ல ராஜ்கிரண் அழைத்து இருக்கிறார். கதையை மொத்தமாக கேட்டவருக்கு இந்த படத்தில் நான் ராமராஜனை தான் நடிக்க வைக்கலாம் என்று இருக்கிறேன். ஆனால், நீங்க சொன்ன கதையில் ராமராஜன் நடித்தால் நன்றாக இருக்காதே என கூறினாராம் ராஜ்கிரண். இக்கதை நன்றாக இருக்கிறது. ஆனால், இதற்கான சரியான நடிகர் யாராக இருக்கும் என இருவரும் யோசித்தனர். உடனே கஸ்தூரி ராஜா இந்த கதையில் நடிக்க சரியான ஆள் நீங்க தான் எனக் கூறியுள்ளார். அதற்கு ராஜ்கிரண் ஒப்புக்கொள்ள உருவாகியது தான் ’என் ராசாவின் மனசிலே’ திரைப்படம்.
என் ராசாவின் மனசிலே திரைப்படம் உருவான பின்னணி…
இப்போது நாயகி தேடல் தொடங்கியது. அப்போது குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு வந்த மீனா நாயகியாக ஒரு படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் பெரிதாக செல்லவில்லை. அப்போது என் ராசாவின் மனசிலே படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இளையராஜா இப்படத்தில் இடம்பெற்ற ’சோள பசுங்கிளியே’ பாடலை எல்லா படப்பிடிப்பும் முடிந்த பிறகே இப்படத்திற்கு இந்த பாடல் இருக்க வேண்டும் எனக் கூறி உருவாக்கி கொடுத்தாராம். இதை தொடர்ந்து வெளிவந்த இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பலரும் ஆஹாஓஹோ என இப்படத்தினை பாராட்டி இருந்தனர்.