கிரிக்கெட் வீரர்கள் பலரும் தற்போது சினிமாவில் கால் பதிக்க தொடங்கி விட்டனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே பலரும் அவர் எந்த மொழியில் படம் எடுக்கப் போகிறார் என்பதை தான் ஆர்வத்துடன் கவனித்தனர். அவர் தன் முதல் படத்தை தமிழில் ஆரம்பித்துள்ளார். அதன்படி ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகியோர் நடிக்கும் எல்.ஜி.எம். என்ற திரைப்படத்தை தான் தோனி தற்போது தயாரித்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து படத்தின் பூஜையும் போடப்பட்டு தற்போது படப்பிடிப்பும் நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா ஆகியோர் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் ஆட்டத்தை பார்க்க வந்திருந்தனர். அந்த போட்டோக்கள் கூட வைரலானது. இந்நிலையில், தோனி தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. உலக உருண்டைக்கு மேல் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகியோர் நிற்கும் படியாக வெளிவந்துள்ள இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதை பார்க்கும் போது ஹரிஷ் கல்யாண் அம்மா, காதலி இருவருக்கும் இடையே மாட்டிக் கொண்டு முழிக்கிறார் என தெரிகிறது. அந்த வகையில் பக்கா குடும்ப திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதையும் இந்த போஸ்டர் உணர்த்துகிறது.