தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், விஜய்யின் 49-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு அனைத்து திரையுலகை சேர்ந்த ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளத்தின் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தளபதியின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, இன்று ‘லியோ’ படத்தில் இருந்து பல அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இன்று மாலை விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் இருந்து தளபதி பாடி, 2000 டான்சர்களுடன் நடனமாடியுள்ள ‘ நா ரெடி’ என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ள நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது படக்குழு. இந்த போஸ்டர் வெளியாகி, தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமான வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த போஸ்டர் தற்போது காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்ப்பதற்கு, Game of Thrones வெப் தொடரில் வரும் கதாநாயகன் ஜான் ஸ்னோவ் போஸ்டர் லுக் போலவே இருக்கிறது என கூறி நெட்டிசன்கள் இரண்டு போஸ்டரையும் ஒப்பிட்டு போட்டு தாக்கி வருகிறார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பின்னர் 2-வது முறையாக விஜய்யை வைத்து இயக்கி வரும் இந்த படத்தில், த்ரிஷா தளபதி விஜய்க்கு ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், கெளதம் மேனன், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கதிர், மடோனா செபஸ்டின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும், ‘லியோ’ படத்தை, அக்டோபர் 19ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.