பிக்பாஸ் ஆயிஷா தற்போது யோகேஷ் என்பவரை காதலித்து வருவதாக, அவரது முன்னாள் காதலன் தேவ் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த அசீம் – ஆயிஷா சண்டையும் அதற்குப் பிறகு ஆயிஷாவைக் கமல் பாராட்டியதும்தான் கடந்த சில நாட்களாக சின்னத்திரை ரசிகர்களின் ஹாட் டாபிக். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தேர்வானபோதே ’நிச்சயம் கன்டென்ட் தருவார்’ எனப் பலரும் நம்பிய ஒருவர் ஆயிஷா. ஏனென்றால், சீரியல் ஏரியாவில் நுழைந்த நாட்களிலேயே பல சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் அடிபட்டதுதான் காரணம். ‘பொன்மகள் வந்தாள்’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநருடன் தகராறு உண்டாகி சீரியலிலிருந்து வெளியேறினார். தவிர, ஆயிஷாவை தமிழ் சீரியல் உலகத்தில் அறிமுகப்படுத்தியது உதவி இயக்குநராக இருந்த தேவ் என்பவர். முதலில் அவரைக் காதலித்து வந்த ஆயிஷா ஒருகட்டத்தில் அவரை விட்டு விலகினார்.
இந்நிலையில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் சில தினங்களுக்கு முன், “நான் டிக் டாக் பண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் எனக்கு நிறைய ஹேட்டர்ஸ் இருந்தார்கள். அதற்குக் காரணம் அப்போது நான் ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருந்தேன், அவர் சொன்னதை மட்டுமே செய்து கொண்டிருந்தேன்” என்று ஆயிஷா குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதில் அளித்திருக்கும் தேவ், “ஆயிஷா டிக் டாக் பண்ணிக் கொண்டிருந்த மூன்று நான்கு வருடங்கள் என்னுடன்தான் இருந்தார். எனவே, என் பெயரைக் குறிப்பிடுவதற்குப் பயந்து அல்லது தவிர்க்க நினைத்து இப்படிச் சொல்லியிருக்கிறார்” என்றார்.
“அவங்களை சீரியலில் அறிமுகப்படுத்தியதே நான்தான். இது எல்லாருக்குமே தெரியும். எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தபோதுதான், விஷ்ணு இடையில் வந்தார். எங்கள் பிரிவுக்கு அவரே காரணமானார். இப்ப விஷ்ணுவும் ஆயிஷாவோட இல்லைன்னு கேள்விப்பட்டேன். இப்ப யோகேஷ் என்பவர் கூட நட்பு பாராட்டிட்டு இருக்காங்க. பிக்பாஸ் வீட்டுக்குள் போற அன்னைக்கும் கூட ஆயிஷாவை யோகேஷ்தான் வந்து வழி அனுப்பி வச்சிட்டுப் போயிருக்கார். இந்த யோகேஷ் யாருன்னா, என்னுடைய தங்கையைக் காதலித்தவர். அதாவது நானும் ஆயிஷாவும் பழகிட்டிருந்த சமயத்துல எங்க ரெண்டு பேரு கூட என்னுடைய தங்கையும் அவளைக் காதலிச்ச இந்த யோகேஷும் சேர, நாங்க ஜோடியா வெளியிலெல்லாம் போயிட்டு வந்திருக்கோம். இப்பப் பார்த்தா யோகேஷ்தான் ஆயிஷா கூட இருக்கார். அவங்களும் ‘Y’ எழுத்து போட்ட டாலர் போட்டிருக்காங்க.
யாரும் எப்படியும் இருந்துட்டுப் போகட்டும். ஆனா முடிஞ்சு போன விஷயங்களைச் சாடை மாடையாப் பேசறது நல்லதில்லை. எங்கிட்டக் கூடத்தான் ஆயிஷா பத்திப் பேச நிறைய விஷயங்கள் இருக்கும். ஆனா நானா வலியப் போய் யார்கிட்டயாவது பேசறேனா? அவங்க என்னை விட்டுப் பிரிஞ்சுப் போன சமயத்துல அவங்களை மறக்க முடியாம வருத்தமா இருந்திச்சு. 6 மாச காலம் இமயமலைப் பக்கம் மன அமைதிக்காகப் போயிட்டு வந்த பிறகு எல்லாமே சரி ஆகிடுச்சு. இப்ப நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்திட்டிருக்கேன். இப்படி இருக்கறப்ப தேவையில்லாம எதுவும் பேசக் கூடாதில்லையா? டிக் டாக் பண்ணிட்டிருக்கும் போது அவங்கக் கூட இருந்தது நான்தான்னு டிவி ஏரியாவுல பலருக்கும் தெரியும். அதனாலதான் இது குறித்து நானும் பதில் பேச வேண்டி இருக்கு’’ என்றார்.