”தமிழ் சினிமாவை திராவிட இயக்கங்கள் கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் ஒரு மதசார்பற்ற நிலையில் இருப்பதற்கு காரணம்” என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பி.-யுமான திருமாவளவனின் 60-வது பிறந்தநாள் மணி விழாவையொட்டி, தமிழ் ஸ்டுடியோஸ் சார்பாக நேற்று விழா நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், “மக்களிடம் இருந்து விலகி எந்தக் கலையும் முழுமை அடையாது. ஏனென்றால், மக்களுக்காகத்தான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை. இந்தக் கலையை சரியாக இன்றைக்கு நாம் கையாள வேண்டும். இன்றைக்கு நாம் கையாளத் தவறினால் கூடிய விரைவில் நிறைய அடையாளங்களை இழக்க நேரிடும்.
தமிழ் சினிமாவை திராவிட இயக்கங்கள் கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் ஒரு மதசார்பற்ற நிலையில் இருப்பதற்கு காரணம். இதேபோன்று வெளிமாநிலங்களில் இருந்து கலை ரீதியாக எந்த அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு தமிழ்நாடு இருக்கிறது. இதற்கும் திராவிட இயக்கங்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன். சினிமா என்பது வெகு மக்களை எளிமையாக சென்றடையக் கூடிய கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது ரொம்ப ரொம்ப முக்கியம். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். விடுதலைக்காக போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.