’வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு நடிகர் விஜய் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகிபாபு எனப் பலரும் நடிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் எண்ணூர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் சிலர் அங்கு குவிந்தனர். ஆனால், விஜய் வெளியே வராததால் அவர்கள் ஏமாற்றமடைந்து சென்றனர்.
இந்த நிலையில், நேற்றிரவு படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு சென்றார் விஜய். அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. படத்தின் சண்டைக் காட்சிகள், மற்றும் பாடல் காட்சிகள் மட்டும் மீதமுள்ள நிலையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கல் திருநாளை ஒட்டி வெளியாக உள்ளது.