தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகமாகி, நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் விஷால். அவர் நடிப்பில் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. டைம் டிராவலை மையாமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் தான், நடிகர் விஷாலின் திருமணம் குறித்த தகவல் ஒன்று சமீபத்தில் வைரலாகி வந்தது. அதாவது, விஷால் நடிகை லட்சுமி மேனனை காதலித்து வருவதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் பரவியது. தற்போது அதுகுறித்து நடிகர் விஷாலே விளக்கம் அளித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “என்னை பற்றிய பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. ஆனால், நடிகை லட்சுமி மேனனுடன் எனக்கு திருமணம் என பரவும் தகவலை நான் முற்றிலும் மறுக்கிறேன்.
அவர் ஒரு நடிகை என்பதை தாண்டி, அவர் ஒரு பெண் என்பதால் தான் தற்போது விளக்கம் அளிக்கிறேன். இதுபோன்ற வதந்திகளை பரப்பி ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை சிதைக்கிறீர்கள்… அடையாளத்தை கெடுக்கிறீர்கள். நான் யாரை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பதை காலமும், நேரமும் கணிக்க முடியாது. சரியான நேரம் வரும்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்” என பதிலளித்துள்ளார்.