தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வடிவேலு மாதிரி நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வந்தவர் சுகுமார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் இவர் நடித்த காதல் திரைப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்திற்கு பின்னர், காதல் சுகுமார் என்றே இவர் அறியப்பட்டார். அப்படத்தை தொடர்ந்து சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார். மேலும், திருட்டு விசிடி என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், நடிகர் வடிவேலு குறித்த அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதில், “வடிவேலு தன்னை சந்திக்குமாறு அழைத்தார். நான் அவரை சந்திக்க சென்றபோது, ஏன் தம்பி ஒவ்வொரு கம்பெனியா போய் என்னை மாறி நடிப்பேனு சொன்னீங்களாமே என கேட்டார். சினிமால அப்படி பண்ண மாட்டேனு அவரிடம் சொன்னேன்.
அதற்கு அவர், இல்லையே ஒரு படத்தில் அப்படி நடிச்சிருக்கீங்களே என கேட்டார். அதற்கு நான், இல்லை அண்ணா வாய்ப்பு வந்தது.. வேறு வழியில்லாமல் நடித்தேன். இனி அப்படி பண்ண மாட்டேன்” என்றேன். பேசிக்கொண்டே இருக்கும்போது என்னடா எதிர்த்து பேசுற, என பின்னாடி ஒருவர் பிடித்து தள்ளினார். பின்னர் தாறுமாறாக அடி விழுந்தது. இனி அப்படி பண்ண மாட்டேன், ஊர விட்டு ஓடிடுறேன் என்று சொல்லி அங்கிருந்து வந்தேன்” என்று பேசினார்.