விஜய் நடித்துள்ள ’வாரிசு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் யூடியூப்பில் வெளியானது முதல் வியூஸ்களை அள்ளிக்குவித்து வருகிறது. அதேசமயம், பல்வேறு ட்ரோல்களையும் சந்தித்து வருகிறது. இது மெகா சீரியல் போல இருக்கிறது என்றும் சுந்தர் சி இயக்கிய ’வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் 2-ம் பாகம் எனவும் எக்கச்சக்கமான ட்ரோல்கள், சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

இதுபோதாது என்று தற்போது காப்பி சர்ச்சையிலும் சிக்கி உள்ளது இந்த ட்ரெய்லர். இதில், விஜய் பேசும் வசனங்கள் பல இடம்பெற்று இருந்தன. அதில் பிரகாஷ் ராஜிடம், ‘மாமே அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது யோசிச்சு கொடுக்கனும், ஏன்னா நீ எதை கொடுத்தாலும் அதை நான் டிரிபிளா திருப்பி கொடுப்பேன்’ என பேசி இருப்பார். இந்த வசனம் தான் காப்பி அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வசனத்தை ரஜினி ஏற்கனவே ஒரு படத்தில் பேசி உள்ளார் என்பதை சூட்டிக்காட்டி, இது எங்க டயலாக் மாமே என ரஜினி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என வாரிசு பட விழாவில் பிரபலங்கள் பலர் பேசி இருந்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ரஜினி ரசிகர்கள், விஜய்யை தாக்கி பதிவிட்டு வந்த நிலையில், தற்போது அவர்கள் வசம் வாரிசு ட்ரெய்லரும் தொக்காக மாட்டியுள்ளது.