இயக்குநர் மாரி செல்வராஜ் ஓடிடி தளத்திற்காக புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், கடந்த 14ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தைத் தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்ரமின் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.
இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்ததாகவும் சொல்லப்பட்ட நிலையில், தற்போது ஓடிடி தளத்தில் வெப் சீரிஸ் ஒன்றை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடரில் நடிகர் கலையரசன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.