ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஷ்வரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், சேராங்கோட்டையை சேர்ந்த ஷாலினி என்ற பெண் 12-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை முனிராஜ் என்ற இளைஞன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தன்னை காதலிக்குமாறு மாணவிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். வழக்கம் போல் இன்று பள்ளி சென்ற மாணவியை வழிமறித்து முனிராஜ் பேசியுள்ளார்.
மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியை கொலை செய்த முனிராஜையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞன் சேராங்கோட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.



