தமிழ்நாட்டில் பதிவு செய்யாமல் செயல்படும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ சட்ட விதிகளுக்கு முரணாக செயல்படும் அல்லது அனுமதி பெறாமல் மருத்துவ சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உடனடியாக பதிவு செய்து சட்டப்படி இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், ஆய்வகங்கள், நோயறிதல் மையங்கள் (Clinics) ஆகியவை தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 1997ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் tncea.dmrhs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைபடுத்துதல்) சட்டம் 1997ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆயுதப்படை நடத்தும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. போலி மருத்துவர்கள் தொடர்பாக tncea.dmrhs@gmail.com என்ற இணையதளத்திலும், 104 என்ற இலவச தொடர்பு எண் மூலமும் புகார் அளிக்கலாம். ஒருமுறை பதிவு பெற்ற மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் உரிமம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
5 ஆண்டுகள் முடிந்த பின் மீண்டும் tncea.dmrhs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து புதுப்பித்துக்கொள்ளலாம். பதிவு செய்யாத மருத்துவமனைகள், நிறுவனங்கள் 2026 ஜூன் மாதத்திற்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவோ, சலுகைகள் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



