இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலையில் ஏற்பட்ட காயத்துக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நல்லகண்ணு ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மூத்த தலைவர் ஆவார். இவர் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளராக இருந்தவர். 1924-ம் ஆண்டு பிறந்தவர். தமிழகத்தின் மூத்த அரசியல் கட்சி தலைவராக உள்ளவர். இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், 100 வயதாகியுள்ள அவருக்கு வயது மூப்பு காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்காக நரம்பியல், நுரையீரல், இதயம் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மருத்துவமனை இயக்குநரும், மூத்த இதய சிகிச்சை நிபுணருமான மருத்துவர் தில்லை வள்ளல் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.