தனக்கு எதிராக பொய்யான புகார் அளித்துள்ள சினேகன்மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் சினேகம் பவுண்டேஷன் விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியும், திரைப்பட பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் 11 லட்சம் ரூபாயை நடிகை ஜெயலட்சுமி மோசடி செய்துவிட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் அவர்களை விசாரணைக்கு அழைத்து பின்னர் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் சினேகம் பவுண்டேஷன் பெயரில் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாக திரைப்பட பாடலாசிரியர் சினேகன் தனக்கு எதிராக அளித்தது பொய் புகார் என்றும், எனவே சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோரி நடிகை ஜெயலட்சுமி மீண்டும் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
. போலீஸார் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்குற்றம் சாட்டி இதுதொடர்பாக எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த எழும்பூர் 13-வது பெருநகர குற்றவியல் நடுவர் கே.வி.சக்திவேல், மனுதாரரான ஜெயலட்சுமி அளித்துள்ள புகார்படி கவிஞர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி, அதுதொடர்பான அறிக்கையை வரும் அக்.19-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என திருமங்கலம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக நடிகை ஜெயலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நான் பாஜகவில் மாநில மகளிரணி துணைத்தலைவராக பதவி வகிக்கிறேன். நடிகையாகவும், வழக்கறிஞராகவும் உள்ளேன். சினேகம் என்ற பெயரில் அறக்கட்டளையை நிர்வகித்து சேவை புரிந்து வருகிறேன். நான் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக என் மீது சினேகன் எந்தவொரு ஆதாரமும் இல்லாத, பொய்யான குற்றச்சாட்டை பொதுவெளியில் தெரிவித்து, புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக நானும் அவருக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு ஏற்படுத்திய மனஉளைச்சலுக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதன்படி நீதிமன்றம் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. சினேகனுக்கு எதிரான இந்த உத்தரவு சமூக வலைதளத்திலும், பொதுவெளியிலும் குறிப்பாக அரசியல் மற்றும் திரைப்பட நடிகைகளை தொடர்புபடுத்தி அவதூறாக பேசி வரும் அனைத்து நபர்களுக்கும் பொருந்தும் என ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.