ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது பலருக்கும் மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. குறிப்பாக கோடை விடுமுறை, பண்டிகை காலங்கள் மற்றும் அவசர பயணங்களின் போது, முன்பதிவு தொடங்கிய சில விநாடிகளிலேயே டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. இதனால் பலருக்கும் “கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்குமா?” என்ற பதற்றம் உருவாகிறது.
ஆனால், ஐஆர்சிடிசி-யின் ஒரு சிறிய வசதியை சரியாக பயன்படுத்தினால், வெறும் சில நிமிடங்களிலேயே தட்கல் டிக்கெட்டை உறுதிசெய்யலாம் என்று பயணிகள் கூறுகின்றனர். அதற்காக முதலில் தட்கல் முன்பதிவு நேரத்தை சரியாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏசி வகுப்புகளான 1ஏசி, 2ஏசி, 3ஏசி உள்ளிட்ட டிக்கெட்டுகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஸ்லீப்பர் மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
தட்கல் டிக்கெட் கிடைக்காமல் போகும் முக்கிய காரணங்களில் ஒன்று, பயணிகளின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட எடுக்கும் நேரம்தான். நீங்கள் விவரங்களை நிரப்பிக் கொண்டிருக்கும்போதே மற்றொருவர் டிக்கெட்டை முன்பதிவு செய்து விடுவார்.
இதற்கான எளிய தீர்வாக ஐஆர்சிடிசி-யின் “மாஸ்டர் லிஸ்ட்” வசதி பார்க்கப்படுகிறது. முன்பதிவு தொடங்குவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாக IRCTC அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலியில் உள்நுழைந்து “My Account” பகுதியில் உள்ள “My Master List” விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின் “Add Passenger” வசதி மூலம் பயணிகளின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே சேமித்து வைக்கலாம். பின்னர் தட்கல் முன்பதிவின் போது “Add Existing” என்பதை கிளிக் செய்தால், சேமிக்கப்பட்ட பெயர்கள் உடனடியாக தோன்றும். இதனால் பயணிகள் விவரங்களை மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. நேரடியாக கட்டணம் செலுத்தும் பக்கத்திற்குச் செல்ல முடியும்.
மேலும், பணம் செலுத்தும் முறையிலும் கவனம் தேவைப்படுகிறது. நெட் பேங்கிங் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது ஓடிபி உள்ளிட்ட செயல்முறைகளால் நேரம் தாமதமாகும். அதற்குப் பதிலாக யூபிஐ முறைகள், பேடிஎம், போன்பே போன்றவற்றை பயன்படுத்தினால் விரைவாக பணம் செலுத்த முடியும். இன்னும் வேகமாக முன்பதிவு செய்ய, ஐஆர்சிடிசி வாலட்டில் முன்கூட்டியே பணம் ஏற்றிவைத்தாலும் உதவியாக இருக்கும்.
முன்பதிவு தொடங்குவதற்கு சரியாக 2 அல்லது 3 நிமிடங்களுக்கு முன்பாக மட்டுமே உள்நுழைய வேண்டும் என்றும் பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிக நேரத்திற்கு முன்பாக செயலியை திறந்து வைத்திருந்தால், காலை 10 அல்லது 11 மணிக்கு தானாகவே கணக்கிலிருந்து வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Read more: ‘கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்’.. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பரபரப்பு கோரிக்கை..!



