உத்தரபிரதேசத்தின் அலஹாபாத் உயர்நீதிமன்றம் காதல் தொடர்பான ஒரு வழக்கில் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது சக ஊழியர் லெக்பால் மீது, திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டினார். 2019-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவிற்கு அழைத்து போதைப்பொருள் கொடுத்து தன்னை வன்கொடுமை செய்ததாகவும், வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பின்னர், திருமணம் செய்வதாக உறுதி அளித்தபோதிலும், நான்கு ஆண்டுகள் கழித்து சாதி காரணம் கூறி திருமணத்தை மறுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இந்த வழக்கு எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பெண் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி அருண் குமார் சிங் தேஷ்வால் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
நான்கு வருடங்களாக சம்மதத்துடன் உடல் ரீதியான உறவு வைத்திருந்த பிறகு, ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ள மறுப்பதால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது என்று நீதிபதி கூறினார். பெண்ணும் ஆணும் பல ஆண்டுகளாக ஒருமித்த காதல் உறவில் இருந்தனர். பெண் ஆரம்பத்திலிருந்தே சமூகக் காரணங்களால் திருமணம் சாத்தியமில்லை என்பதை அறிந்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில் சம்மதத்துடன் உடல் உறவு இருந்தால், அதை பாலியல் வன்கொடுமையாகக் கருத முடியாது, என விளக்கினார்.
இதனால், பெண் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காதல் உறவில் இருவரும் நீண்டகாலம் ஒருமித்த சம்மதத்துடன் உடல் உறவு கொண்டிருந்தால், பின்னர் திருமணம் நடக்காத நிலையில் கூட, அதனை பாலியல் வன்கொடுமை என்று சட்டரீதியாகக் கருத முடியாது என அலஹாபாத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.