சட்டமன்ற தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். 2026 தேர்தலில் 10 முதல் 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதுதான் கட்சியினரின் விருப்பம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; அரசியலில் தவறு நடப்பது இயல்புதான். அதிமுகவுடன் கூட்டணி வைத்து செய்த தவறை ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக் காலத்தில் மதிமுக வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை. அதில் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், எம்ஜிஆரையோ, ஜெயலலிதாவையோ கொச்சைப்படுத்தி பேசவில்லை. மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வைகோ முடிவெடுப்பார்.
திமுகவில் தற்போது சேர்க்கப்பட்டவர், 3 ஆண்டுகளுக்கு முன்பே மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர். மேலும் 11 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். மதிமுகவுக்கு அங்கீகாரம் பெறுவது முக்கியம். அதற்கு குறைந்தபட்சம் 10, 12 தொகுதிகளில் போட்டியிட்டு, 8 தொகுதியில் வெற்றி பெற்றால்தான் அங்கீகாரம் கிடைக்கும். இதுதான் எங்களது கட்சியினர் விருப்பம் என்றார். தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மதிமுக விளங்குகிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் செப்டம்பரில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது.
மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் காலி நாற்காலிகளை படம் எடுத்த பத்திரிக்கையாளர்களை அடிக்க வேண்டும் என வைகோ கூறவில்லை. வைகோ கோபப்படுவதால் அவர் இழந்தது தான் அதிகம். கோபப்பட்டாலும் அவர் நல்ல மனிதர். பொடா சட்டம் வந்த பொழுது வைகோ அதை ஏற்றுக்கொள்ள கூடாது என பாராளுமன்றத்தில் பேசினார். பொடாவில் பத்திரிக்கை துறையினரையும் கைது செய்யலாம் என இருந்தது அதை மட்டுமாவது நீக்க வேண்டும் என பேசியவர் வைகோ என்றார்.
Read more: அதிர்ச்சி…! திருப்புவனம் அஜித் போல் மற்றொரு சம்பவம்…! அண்ணாமலை எழுப்பும் சந்தேகம்…!