டெல்லி வசந்த் குஞ்சில் உள்ள ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை-ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த அவரை ஆக்ரா போலீசார் இன்று கைது செய்தனர்.
பிரபல ஆன்மீக நிறுவனத்தால் நடத்தப்படக்கூடிய கல்வி நிறுவனம் ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் மேனேஜ்மென்ட். இந்த நிறுவனத்தின் மேலாளராக இருப்பவர் சாமியார் சைத்தியானந்த சரஸ்வதி.. இவர் அங்குள்ள மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள் ஒன்றுசேர்ந்து, ஆசிரமத்திலிருந்த ஆசிரியர்களிடம் புகார்களை கொண்டு சென்றுள்ளனர்.. ஆசிரியர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் ஆசிரமத்தில் நுழைந்து, சோதனை நடத்தினர். ஆனால் அதற்குள் சாமியார் தலைமறைவாகிவிட்டார்.
காவல்துறை தகவலின்படி, சுவாமி சைதன்யானந்த சரஸ்வதியின் மொபைலில் இருந்து பல்வேறு ஆபாச வாட்ஸ்அப், குறுஞ்செய்திகள், இளம் பெண்களுடன் நடைபெற்ற அரட்டை பதிவுகள், மற்றும் விமானப் பணிப்பெண்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாணவிகளை ஏமாற்றவும் கவர்ந்திழுக்கவும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மொத்தம் 32 மாணவிகளில் 17 பேர், சுவாமி மீது நேரடியாக புகார் அளித்துள்ளனர். அவர் தவறான வார்த்தைகள், தேவையற்ற உடல் தொடர்பு, ஆபாச செய்திகளின் மூலம் தொந்தரவு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், EWS உதவித்தொகையில் படித்த மாணவிகளை மிரட்டியதும் விசாரணையில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சாமியாரை ஆக்ராவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில், சுவாமி சைதன்யானந்த சரஸ்வதியின் இரண்டு பெண் கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சைதன்யானந்த சரஸ்வதி காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்காமல், நேரடி பதில்களைத் தொடர்ந்து தவிர்த்து வருவதாகவும்
காவல்துறை தெரிவித்துள்ளது. உறுதியான ஆதாரங்களை எதிர்கொள்ளும் போதுதான் அவர் பதில் அளிக்கிறார். இதனால் விசாரணை சவாலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.