கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பால் 20 குழந்தைகள் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் காய்ச்சல் மற்றும் இருமல், சளி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிரப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை எடுத்துக்கொண்ட குழந்தைகள் திடீரென உயிரிழந்திருக்கின்றன. அதேபோல இராஜஸ்தானில், முதலமைச்சரின் இலவச மருத்துவ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், பலர் நோய்வாய்ப்பட்டனர்.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நடத்திய ஆயவில் கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துதான் குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணம் என்று கூறப்பட்டது. வண்ணப்பூச்சுகள், பிரேக் திரவங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் ‘Diethylene Glycol (DEG)’, ‘Ethylene Glycol (EG)’ நச்சுகள் கோல்ட்ரிஃப் மருந்தில் கலந்திருப்பதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் ஆய்வில் வெளியாகியிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து, இராஜஸ்தான் அரசு மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராஜாராம் சர்மாவை இடைநீக்கம் செய்ததுடன், Kayson Pharma நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட அனைத்து 19 மருந்துகளின் விநியோகத்தையும் நிறுத்தியுள்ளது. இராஜஸ்தான் மருத்துவ சேவைகள் கழகம் வெளியிட்ட தகவலின்படி, 2012 ஆம் ஆண்டு முதல் Kayson Pharma மருந்துகளின் 10,119 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அதில் 42 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு முதலமைச்சர் பஜன் லால் சர்மா உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான சிறுநீரக தொற்று காரணமாக ஒன்பது குழந்தைகள் இறந்ததை அடுத்து, Coldrif சிரப் விற்பனைக்கு மத்தியப் பிரதேச அரசு தடை விதித்துள்ளது. சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில், முதலமைச்சர் மோகன் யாதவ், சிந்த்வாராவில் Coldrif சிரப் காரணமாக குழந்தைகள் இறந்த நிகழ்வு மிகவும் துயரமானது என்று தெரிவித்தார். இந்த சிரப் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று மத்தியப் பிரதேச அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதனால் மத்தியப் பிரதேச அரசு கோல்ட்ரிஃப் விற்பனையையும் அந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து மருந்துகளையும் தடை செய்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் அமைச்சர் மா.சுப்பிரமணியம், ‘இந்த கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்தைப் பயன்படுத்த வேண்டாம். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வந்த ”Sresan Pharmaceuticals’ மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டிருக்கிறார். மத்தியப் பிரதேச அரசும், தமிழ்நாடு அரசும் சேர்ந்து நடத்திய இந்த காவல் விசாரணையிலும், மருந்துகளின் சாம்பிள்களை எடுத்து ஆய்வு செய்து நச்சுத் தன்மை இருப்பதை உறுதி செய்தும் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர்.
சிந்த்வாரா காவல் கண்காணிப்பாளர் அஜய் பாண்டே கூறுகையில், ரங்கநாதன் புதன்கிழமை இரவு காவலில் எடுக்கப்பட்டார். அவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் போக்குவரத்து காவல் பெற்ற பிறகு மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவுக்குக் கொண்டு வரப்படுவார்.
மருத்துவ பரிசோதனைகளில், சிரப்பில் டைஎதிலீன் கிளைகோல் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது, இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருளாகும், இது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தியது. இறந்த குழந்தைகள் உஜ்ஜைன், குணா மற்றும் சிவபுரி உள்ளிட்ட மத்தியப் பிரதேசத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். பெரும்பாலானவர்களுக்கு சாதாரண சளி மற்றும் இருமலுக்கு இந்த சிரப் பரிந்துரைக்கப்பட்டு, அதை உட்கொண்ட சில நாட்களுக்குள் நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், குறைந்தது 40 குழந்தைகள் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர், இது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைத் தவிர, ராஜஸ்தானிலும் கோல்ட்ரிஃப் சிரப் தொடர்பான சில இறப்புகள் பதிவாகியுள்ளன, அங்கு மருந்தை உட்கொண்ட பிறகு குழந்தைகளுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வக சோதனையில் கோல்ட்ரிஃப் சிரப்பில் நச்சு இரசாயனங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள், அக்டோபர் 4 ஆம் தேதி மத்தியப் பிரதேச அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரிடமிருந்து வந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மாநிலம் முழுவதும் கோல்ட்ரிஃப் சிரப்பின் விற்பனை, விநியோகம் மற்றும் இருப்பு வைப்பதற்கு உடனடியாகத் தடை விதித்து உத்தரவிட்டார். பின்னர் இந்தத் தடை, ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரிக்கும் அனைத்து மருந்துகளுக்கும் நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையில், சில்லறை மற்றும் மொத்த சந்தைகளில் 2,000க்கும் மேற்பட்ட கோல்ட் டிரிப் கோல்ட் டிரிப் பாட்டில்கள் இன்னும் புழக்கத்தில் இருக்கலாம் என்ற தகவல் வெளியானதை அடுத்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை மாநிலம் தழுவிய ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது. மருந்தைப் பறிமுதல் செய்து, மாதிரிகளை சென்னையில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்புமாறு மாவட்ட மருந்து ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.