சென்னை ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர், ஓடும் லாரியில் ஏறி நடனமாடியபோது கீழே விழுந்து உயிரிழந்தார்.
2014ஆம் ஆண்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரேநாளில் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி இரவு முதலே திரையரங்கு வாசலில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள், திரைப்படத்தை உற்சாகமாக கண்டுகளித்தனர்.

இந்நிலையில், சென்னை ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர் பரத்குமார், ஓடும் லாரியில் ஏறி நடனமாடியபோது கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த சிந்தாரிப்பேட்டை ரிச்சி தெருவைச் சேர்ந்த இளைஞர் பரத்குமார் (19) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.