நாமக்கல் மாவட்டத்தில், கடந்த செப்.27ஆம் தேதி விஜய் பிரசாரத்தின்போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாமக்கல் காவல்துறையினர் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல்துறை தன்னை கைது செய்யலாம் என அஞ்சி, சதீஷ்குமார் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், கடுமையான வாதங்களை முன்வைத்தார். மனுதாரர் அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்வதாகக் கூறி அனுமதி பெற்றிருந்தாலும், அவரது கட்சியினரின் அத்துமீறிய நடவடிக்கைகளால் மருத்துவமனைக்கு சுமார் ரூ.5 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த ஆதாரங்களைப் பார்வையிட்ட நீதிபதி, “கட்சியினர் இதுபோன்ற அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தனக்கு எதுவும் தெரியாது என்று மனுதாரர் எப்படிச் சொல்ல முடியும்? ஒரு மாவட்டச் செயலாளராகக் கட்சியினரைக் கட்டுப்படுத்தத் தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?” என்று சரமாரியான கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து, சதீஷ்குமாரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, தலைமறைவாக உள்ள தவெக மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் சதீஷ்குமார் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : வீட்டில் கழிவறையை விட ஆபத்தான இடம், பொருள் எது தெரியுமா..? பேராபத்தை விளைவிக்கும் அபாயம்..!!