தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது..
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.. சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக டெல்லி தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.. இந்த குண்டுவெடிப்பில் 3 அல்லது 4 வாகனங்களும் தீப்பிடித்து சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்..
டெல்லி காவல்துறைத் தலைவர் சதீஷ் கோல்ச்சா செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், குண்டுவெடிப்பு குறித்து அவருக்கு தொடர்ந்து விளக்கமளிப்பதாகவும் கூறினார்.
இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் பேசிய போது “எனக்கு முன்னால் இருந்த கார் சுமார் இரண்டு அடி தூரத்தில் இருந்தது. அதில் வெடிகுண்டு இருந்ததா அல்லது வேறு ஏதாவது இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது வெடித்தது. அது ஒரு ஸ்விஃப்ட் டிசையர் கார்,” என்று தெரிவித்தார்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அமித்ஷா விளக்கம் அளித்தார்..
இதனிடையே டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை செண்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடந்து வருகிறது.. கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..
ஜம்மு காஷ்மீர் காவல்துறை இன்று நடத்திய மிகப்பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGuH) ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பைக் கண்டுபிடித்தது. பல மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம், 7 பேர் கைது செய்யப்பட்டனர், வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட தகவல் தொடர்பு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை “வெள்ளை காலர் பயங்கரவாத சுற்றுச்சூழல் அமைப்பு” என்று இதனை குறிப்பிட்டுள்ளது.. 2,900 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.. இந்த சூழலில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..



