அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளைப் பத்திரப்பதிவு செய்வதைத் தடுக்கும் நோக்கத்தில், 1908-ஆம் ஆண்டு பதிவுத்துறை சட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தம்தான் பிரிவு 22-A. விவசாய நிலங்கள் முறையற்ற வகையில் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதைத் தடுப்பதும், சட்டவிரோத லே-அவுட்களை கட்டுப்படுத்துவதுமே இந்த சட்டத்தின் முக்கிய இலக்காகும்.
இந்த சட்டத்தின் அடிப்படையில், அங்கீகரிக்கப்படாத லே-அவுட்களில் உள்ள மனைகள் தொடர்பான விற்பனை, தானம், அடமானம், பரிமாற்றம், குத்தகை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்யச் சார்-பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 2016-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் DTCP, CMDA ஆகிய நகர் மற்றும் ஊரமைப்பு அமைப்புகளின் அனுமதியுடன் மட்டுமே மனைகளை விற்பனை செய்து வருகின்றன. மேலும், RERA-வில் பதிவு செய்யப்பட்ட திட்டங்களே பொதுமக்களுக்கு விற்பனைக்கு வர வேண்டும் என்ற கட்டாயமும் அமலில் உள்ளது.
ஆனாலும், பத்திரப்பதிவின் போது சார்-பதிவாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் குழப்பம் நீடித்து வந்தது. இதற்கான முக்கிய காரணம், வருவாய் துறை ஆவணங்களில் நில வகைப்பாடு மாற்றப்படாமல் இருப்பதே. தமிழகத்தில் டவுன் சர்வே நடத்தப்பட்ட நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே, வருவாய் பதிவுகளில் நிலம் ‘மனை’ அல்லது ‘குடியிருப்பு’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், டவுன் சர்வே நடக்காத பல பகுதிகளில், DTCP/CMDA மூலம் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகள்கூட, பட்டாவில் ‘நஞ்சை’ அல்லது ‘புஞ்சை’ நிலம் என்றே காணப்படுகிறது.
இதன் காரணமாக, பதிவு சட்டத்தின் பிரிவு 22-A-ஐ மேற்கோள் காட்டி, பட்டாவில் விவசாய நிலமாக குறிப்பிடப்பட்டிருப்பதை காரணமாகக் கொண்டு, சில சார்-பதிவாளர்கள் பத்திரப்பதிவை மறுக்கும் நிலை உருவானது. மேலும், இதையும் மீறி பதிவு செய்தால் தணிக்கையின் போது குறிப்பு எழுதப்படும் என்ற அச்சத்தாலும் பதிவு அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், பதிவுத்துறை தரப்பில் இருந்து வருவாய் துறைக்கு தொடர்ச்சியாக புகார்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயர்மட்ட ஆலோசனைகளில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளின் பட்டாக்களில் நில வகைப்பாடு ‘நஞ்சை’, ‘புஞ்சை’ என இருப்பதை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, டவுன் சர்வே நடத்தப்படாத பகுதிகளில் உள்ள குடியிருப்பு நிலங்களுக்கு, வருவாய் ஆவணங்களில் நில வகைப்பாட்டை தெளிவாகப் பதிவு செய்ய புதிய உத்தரவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருவாய் துறையின் இந்த நடவடிக்கை அமலுக்கு வந்தால், அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகள் பத்திரப்பதிவு தொடர்பான நீண்டகால குழப்பம் முடிவுக்கு வரும் என்றும், சார்-பதிவாளர்களின் சட்ட அச்சம் நீங்கும் என்றும், பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Read more: திடீரென முடங்கிய Google Meet..! மீட்டிங்கில் சேர முடியாமல் பல பயனர்கள் அவதி..!



