பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் கிரானா மலைப் பகுதி மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதா என்ற விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” எனும் பெயரில் ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் 13 விமானப்படைத் தளங்களில் 11 தளங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் துல்லிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலால் பாகிஸ்தானின் விமானப்படை பாதுகாப்பு கட்டமைப்பும், இராணுவ உள்கட்டமைப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிரானா மலை மீது தாக்குதல் நடந்ததா என்ற கேள்விக்கு, மே 12-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி பதிலளிக்கையில், “நாங்கள் கிரானா ஹில்ஸைத் தாக்கவில்லை” என்று தெளிவாக மறுத்தார். ஆனால் அவரின் பதில் அளிக்கும் பொழுது வந்த சிரிப்பு புன்னகை, சமூக வலைதளங்களில் வைரலானது.
கிரானா மலை என்பது பாகிஸ்தானின் அணு ஆயுத சேமிப்பு மற்றும் சோதனை முகாம்களில் ஒன்று என்று நம்பப்படுகிறது. இங்கு நிலத்தடி சுரங்கங்கள், ரேடார் நிலையங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதால், இது மிகுந்த பாதுகாப்பு வலையமைப்புடன் கூடிய பகுதியாகக் கருதப்படுகிறது.
பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் கிரானா மலைப் பகுதி மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதா என்ற விவாதம் கடந்த மாதங்களில் தொடங்கியது. தற்போது, ஜூன் 2025-இல் எடுக்கப்பட்ட கூகுள் எர்த் செயற்கைக்கோள் படங்கள் இந்த விவாதத்தை மீண்டும் எழுப்பி உள்ளன.
செயற்கைக்கோள் பட நிபுணர் டேமியன் சைமன், X சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள படங்கள் மற்றும் பகுப்பாய்வுகள் பாகிஸ்தானின் சர்கோதா மாவட்டத்திலுள்ள கிரானா மலை மற்றும் முஷாஃப் விமானப்படைத் தளத்தில் தாக்குதல் நடந்ததைக் காட்டுகிறது. மே 2025-இல் எடுத்த படங்களில், மலைப் பகுதியில் தாக்குதல் நடந்ததைக் குறிக்கும் அடையாளங்களும், விமான ஓடுபாதைகளில் ஏற்பட்ட சேதங்களும் தெளிவாக காணப்படுவதாக அவர் கூறுகிறார்.
சமீபத்தில் வெளியான செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தரவுகள், இரு நாடுகளுக்கிடையே நடந்த மறைமுக மோதலின் உண்மை நிலையை வெளிக்கொணர முயற்சிக்கின்றன. இதற்கிடையில், அரசு தரப்பின் மறுப்புகளும், ஆராய்ச்சியாளர்களின் பகுப்பாய்வுகளும் தொடர்கின்றன. பாகிஸ்தான்-இந்தியா உறவில் புதிய பரபரப்பை உருவாக்கும் இந்த விவகாரம், அடுத்த நாட்களில் இன்னும் பல விவாதங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
Read more: அண்ணாமலைக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி.. விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!