கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் புதிய பயனாளிகளை இணைத்து மேலும் விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வந்தது.
அதன்படி, கூடுதல் மகளிர் பயனடையும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் டிசம்பர் 12ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக விரிவாக்கப்பட்டது. முன்னதாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில், ஏராளமான பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர். விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள், வருமான விவரங்கள் மற்றும் குடும்ப நிலை ஆகியவை கவனமாக சரிபார்க்கப்பட்டு, தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்தனர்.
இந்த முழுமையான சரிபார்ப்புக்குப் பிறகு, புதிதாக தகுதியானோர் பட்டியலை தமிழக அரசு இறுதி செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட பெண்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில், அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், டிசம்பர் 13-ம் தேதி முதல் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விண்ணப்பித்த அனைவருக்கும் விண்ணப்ப நிலை குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணமும் குறுஞ்செய்தியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியிருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு மேல்முறையீடு செய்ய தமிழக அரசு வாய்ப்பளித்துள்ளது.
தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பம் மறுக்கப்பட்டிருந்தால், அதற்கான முழுமையான நடைமுறையை அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு கடந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. நீங்கள் உங்கள் மேல்முறையீடு மனுக்கள் உங்கள் உள்ளூர் கிராம, நகர் அலுவலர்களிடம் கொடுக்கலாம். அல்லது மகளிர் நலத் தனி வட்டாட்சியரை அணுகலாம். இதன் பின் மேல்முறையீட்டு மனுக்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரின் சீராய்வுக்கு அனுப்பப்படும்.
அதிகாரிகள் ஆவணங்களை மீண்டும் சரிபார்த்து, விண்ணப்பதாரரின் தகுதியை முடிவு செய்வார்கள். சிறுபிழைகள் அல்லது ஆவண முரண்பாடுகளால் தகுதியான பெண்கள் யாரும் விடுபடாமலிருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக, இ-சேவை மையங்கள் மூலமாகவும் மேல்முறையீடுகளை சமர்ப்பிக்க அரசு வழிவகை செய்துள்ளது. அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல முடியாத பெண்கள், தங்கள் அருகிலுள்ள மையங்கள் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.
Read more: பயணிகளுக்கு ஷாக் நியூஸ்..! இன்று முதல் ரயில் டிக்கெட் விலை உயர்வு அமல்! எவ்வளவு தெரியுமா?



