தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், தங்கத்தை அவசர தேவைகளுக்கான முக்கிய நிதி ஆதாரமாகப் பயன்படுத்தும் வழக்கம் மக்களிடம் குறையவில்லை. தேவைப்படும்போது உடனடியாகப் பணமாக மாற்ற முடியும் என்பதாலும், வங்கிகளில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம் என்பதாலும், தங்க நகைக்கடனுக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது.
இந்தக் கடன் நடைமுறையில் ஆவணங்களோ, அதிக சிக்கல்களோ இல்லை என்பதால், சாமானியர்கள் தங்க நகைக்கடன் பெறுவதையே அதிகம் விரும்புகின்றனர். தேசிய வங்கிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றிலும் நகைக்கடன் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொள்ள திமுக அரசு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதன்படி பொங்கலுக்கு 5000 பரிசாக கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் விரைவில் தங்க நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
2021 சட்டப்பேரவை தேர்தலில் 11.70 லட்சம் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த ரூ.6,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு? என்பது குறித்த பட்டியலை வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more: 15 பேர் பலி; பாய்லர் வெடித்து பயங்கர விபத்து.. பாகிஸ்தானில் சோகம்..!



