5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து பேச ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கடந்த 8 ஆண்டுகளாக எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டிலேயே திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனையில் பாஜக தலையிடாது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கேட்பதற்காகவே சட்டப்பேரவை கட்சி தலைவர் நயினார் நாகேந்திரனும் நானும் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்றோம்.

கடவுளை நிந்தனை (அவமதிப்பு) செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகவே பாஜகவின் நிலைப்பாடு இருக்கும். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். கூட்டணி குறித்து தேசியக் குழுதான் முடிவு செய்ய வேண்டும். அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்துவதாக கூறுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்ததாக அறிக்கை விடும் ஆ.ராசா, ஆதாரம் இருந்தால் நிரூபிக்கட்டும். இதுகுறித்து பேச அவருக்கு தகுதி இல்லை”. இவ்வாறு அவர் பேசினார்.