கள்ளக்காதல் பிரச்சனையால் பெண்ணை கழுத்தறுத்து கொன்றுவிட்டு வாலிபர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவெறும்பூரில் அரங்கேறியிருக்கிறது.
திருச்சி மாவட்டம், மேலகல்கண்டார் கோட்டை, பழைய அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் வினோத்குமார் (36) தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு முதல் திருமணமாகி விவாகரத்தான நிலையில், 2-வது திருமணம் செய்துகொண்டு அதுவும் தற்போது விவாகரத்து நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி விஸ்தரிப்பு பகுதியில் உள்ள தந்தை சுந்தரமூர்த்தி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும்போது எதிர் வீட்டில் உள்ள சீனிவாசனின் மனைவி புவனேஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், இன்று காலை வினோத்குமார் தனது காதலி புவனேஸ்வரி வீட்டிற்கு வந்து தான் கையில் வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரி கழுத்து மற்றும் உடலில் குத்திகொலை செய்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள தண்டவாளத்தில் ரயில் செல்லும்போது அதன்முன் பாய்ந்து தானும் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல் தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட வினோத்குமாரின் உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவு இத்தகைய விபரீதத்தில் முடிந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.