பண்ருட்டியில் உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நிதியுதவியாக ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள புறங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். கபடி வீரரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், அவரது குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினர் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியாக ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். தொடர்ந்து கபடி வீரர் விமல்ராஜின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.