ஆலந்தூரில் பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் வாகனங்களை தாக்கியும், பொதுமக்களை வெட்டியதாலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சென்னையின் முக்கிய பகுதியான ஆலந்தூரில் நேற்று நள்ளிரவில் திடீரென இருபதுக்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் ஒன்று சாலைகளில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்துள்ளன. அப்போது, அந்த ரவுடி கும்பல் சாலைகளில் நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது. மேலும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அவர்கள் பட்டாக்கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த ரவுடிகளின் அட்டகாசம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த நிலையில், அவர்கள் மீதே அந்த ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் நள்ளிரவே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டையில் 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.