திருமணமான இரண்டாவது நாளிலேயே தனது காதலனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மீனாட்சிபுரம் அருகே புது காலனியைச் சேர்ந்த 25 வயது வாலிபர் எலக்ட்ரீசினியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் போத்தனூரை சேர்ந்த பட்டதாரியான 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 9ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணமான 2-வது நாளில் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமாகியுள்ளார். அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அவரது கணவர் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், ’உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்’ என அனுப்பி இருந்தார்.

இதனைப் பார்த்து கணவரும், பெண்ணின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து மதுக்கரை போலீசில் கணவர் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஓடிப்போன இளம்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே அவரது வீட்டின் அருகே வசிக்கும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இது நாளடைவில் காதலாக மாறி இருவருமே தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே, அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருபக்கம் விசாரித்து வந்தாலும், திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.