மனைவியின் தவறான உறவை கண்டித்த இரும்பு வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வட்டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மகன் முத்துராமலிங்கராஜன் (45). பழைய இரும்பு வியாபாரியான இவருக்கு உஷா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், முத்துராமலிங்கராஜனுக்கும், உஷாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். உஷா தனது தாயுடன் ஏ.பி.நாடனூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு முத்துராமலிங்கராஜன் தனது தாயாரிடம் வெளியூருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

ஆனால், நேற்று முன்தினம் முத்துராமலிங்கராஜன் பூலாங்குளம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், இறந்து கிடந்தார். மேலும் அவரது கை, கால்கள் முறிந்த நிலையில் இருந்ததால், இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் கிடைத்த தடயங்களை சேகரித்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அதாவது, வட்டாலூரை சேர்ந்த கடல்மணி என்பவருக்கும், முத்துராமலிங்கராஜனின் மனைவி உஷாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த முத்துராமலிங்கராஜன் தனது மனைவியை கண்டித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் முத்துராமலிங்கராஜனை திட்டமிட்டு கொலை செய்திருப்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உஷாவை பிடித்து விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில் தப்பியோடிய கள்ளக்காதலன் கடல்மணியை, தீவிரமாக தேடி வருகின்றனர்.