ஓசூர் அருகே குடியிருப்புப் பகுதி அருகே மனித எலும்புக் கூடு ஒன்று கிடந்ததால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேருநகர் அடுத்த ஜீவாநகர் குடியிருப்பு பகுதி அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. காடு போன்று காணப்படும் இந்த இடத்தில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்துள்ளது. இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், மனித எலும்புக்கூட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல மாதங்களாக அந்த எலும்புக்கூடு அப்பகுதியில் கிடந்தது தெரியவந்தது. எலும்புக் கூடாக கிடந்தது ஆணா? அல்லது பெண்ணா? யார் அவர்? எப்படி எலும்புக்கூடு இந்த இடத்திற்கு வந்தது என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, எலும்புக்கூட்டை கைப்பற்றிய போலீசார், விசாரணைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் துறைக்கு எலும்புக்கூட்டின் பாகங்களை அனுப்பி விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.