”எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டாரா என்பது மக்களுக்கு தெரியும்” என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அதிமுகவின் கோட்டை மேற்கு மண்டலம் தான். பெங்களூருவில் இருந்து வெளியே வந்தபோது அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என தெரிவித்தேன். இப்போதும் அதை தான் கூறுகிறேன். என்னோட வார்த்தையும் அதேதான். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவை அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டனர். முதலில் விமர்சித்தனர். அதன் பின் ஏற்றுக்கொண்டனர். எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டாரா என்பது மக்களுக்கு தெரியும்.

தேர்தல் வரைக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் மாநகராட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது. ஊழல் அதிகமாகிவிட்டது. யாரை யாரையும் தட்டிக் கேட்க முடியவில்லை. என்னுடைய சுற்றுப்பயணம் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். மின் கட்டணம் உயர்த்தப்பட்டு மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர். அனைவரையும் கசக்கிப் பிழிகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். அதற்கான பணிகளை நான் செய்து வருகிறேன். திமுகவை மக்கள் வெறுத்துள்ளனர். இதனால் எங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மை மக்களுக்கு தெரியட்டும். மக்களுக்கு எல்லாம் தெரிந்து எல்லோரும் அரசியல் செய்து பார்த்தார்கள். அது நடக்கவில்லை”. இவ்வாறு அவர் பேசினார்.