திருமணமான அன்றே புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கல்லூரி காலத்தில் இருந்தே காதல் இருந்து வந்த நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் சுரேஷ்குமார் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். அதன்படி, நேற்று காலை கோட்டகுப்பம் அடுத்த புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, மாலை கோட்டகுப்பம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி உள்ளனர். அப்பொழுது அனைவரும் வராண்டாவில் பேசிக் கொண்டிருந்த போது, மாப்பிள்ளை உடைமாற்றி வருவதற்காக அறைக்குள் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் வராததால், உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது புது மாப்பிள்ளை சுரேஷ் மயங்கி கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், சுரேஷ் குமாரின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான அன்றே புது மாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.