பவானிசாகர் பகுதியில் காதலிக்காத ஆத்திரத்தில் பிளஸ்1 மாணவியை நடுரோட்டில் வழிமறித்து கழுத்தை அறுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், திடீரென கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி வாலிபரிடம் இருந்து தப்பிக்க போராடியபடி அலறினார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓடினான். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த மாணவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சக்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், தப்பி ஓடிய வாலிபர் பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் நவீன்குமார் (21) என்பதும், ஏற்கனவே இதே மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்தவர் என்பதும், அந்த ஆத்திரத்தில் மாணவியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாக உள்ள நவீன்குமாரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.