சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கடலூர், டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட்டை வாபஸ் பெறுவதாக கூறிய நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் நீடிப்பதாக தெரிவித்துள்ளது. தேனி,திண்டுக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது.
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதன் காரணமாக 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே சீர்காழியில் 43 செமீ மழை பெய்துள்ளதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து 27 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.