எடப்பாடி பழனிசாமி துணிச்சல் இல்லாதவர் என்றும் தானும் சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் நேரம் வரும்போது ஒன்றிணைவோம் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு அவர்களது படத்திற்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டதால் நான் அதை பற்றி எதுவும் கூற முடியாது. சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் இன்று அதன் பேரணிக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை.
2024இல் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என்பது எனது யூகம். இருந்தாலும் அதை உறுதியாக கூற முடியாது. கடந்த 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தல் போல் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அரசுப் பேருந்தில் பெண்களின் இலவச பயணத்தை பற்றி அமைச்சர் ஒருவர் இழிவாக பேசியது திமுகவின் குணாதிசியத்தை காட்டுகிறது. திமுக என்னும் தீய சக்தியை வெல்ல அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
அமமுக கடந்த 5 ஆண்டுகளாக தனித்து சுதந்திரமாக செயல்படும் ஒரு இயக்கம். ஓ.பன்னீர்செல்வம் கருத்தும் எனது கருத்தும் ஒன்றாகத்தான் உள்ளது. நான், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் நேரம் வரும் போது ஒன்றிணைவதில் தவறு இல்லையே? ஏன் எடப்பாடி பழனிசாமி கூட எங்களுடன் இணையலாம். சசிகலா சிறையில் இருக்கும் போது அப்போதைய அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அவரை பார்க்க சென்றோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி வரவில்லை. ஏன் என்று கேட்டதற்கு. ஒரு லோக் ஆயுத்தா பிரச்சனை இருக்கிறது. நான் வந்தால் என்னை சிறையில் போட்டு விடுவார்கள் என கூறினார். அவர் வீட்டுக்கு போலீஸ் சென்றாலே பயந்து விடுவார். அவர் ஒரு தொடை நடுங்கி. நீங்கள் தவறான ஆளை முதலமைச்சர் பதவியில் அமர வைத்துள்ளீர்கள் என சசிகலாவிடம் ஏற்கனவே நான் கூறினேன்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.