கோவையில் விளையாடிக் கொண்டிருந்த 10 குழந்தைகள் உட்பட 11 பேரை தெருநாய் கடித்துக் குதறியதால், மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 84-வது வார்டில் உள்ள கரும்புக்கடை மற்றும் ஞானியார் நகர் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருந்தனர். விடுமுறை தினமான நேற்று சற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது. அப்போது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று திடீரென விளையாடிக் கொண்டிருந்த 10 குழந்தைகள் உட்பட 11 பேரை கடித்துக் குதறியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து நின்றனர். பின்னர் நாயை விரட்டி விட்டு குழந்தைகள் அனைவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து நாய் கடித்து காயமடைந்தவர்களை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.