இரவு நேரத்தில் திருட வந்த இளைஞர், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தண்டையார்பேட்டையில் அரங்கேறியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் வசித்து வரும் முல்லா என்பவர் தனது மனைவி குழந்தைகளோடு அதே பகுதியில் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞர் மகேஷ்குமார் என்பவர் பால்கனி வழியாக சுவர் ஏறி குதித்து முல்லாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது, டேபிள் மீது வைத்திருந்த பணத்தை திருடியுள்ளார். பின்னர் குழந்தைகளோடு படுத்திருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த அப்பெண் சுதாரித்துக் கொண்டு கூச்சலிடவே முல்லா எழுந்து பார்த்தபோது மகேஷ் குமார் அங்கிருந்து கீழே குதித்து தப்பியோடி உள்ளார்.
உடனடியாக அக்கம்பத்தினர் உள்ளவர்கள் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட போலீசார், இளைஞர் மகேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இரவு நேரத்தில் வீட்டில் திருட வந்து விட்டு, பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.