தனியார் பேருந்து ஓட்டுநரிடம் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேருந்தை எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியில் வசித்து வருபவர்கள் கோவிந்தராஜ்-ஜமுனா தம்பதியினர். கோவிந்தராஜ் பக்கவாதம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று மனைவி ஜமுனா கோவிந்தராஜின் உதவித்தொகைக்காக விண்ணப்பித்து விட்டு சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக அவர்கள் மீது இடிப்பது போன்று வந்து நின்றுள்ளது. இதனால் பயந்து போன ஜமுனா பயத்தில் உறைந்தவாறு நின்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜமுனா அந்த பேருந்து ஓட்டுனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஜமுனா பேருந்து ஓட்டுனரை கடுமையான வார்த்தைகளால் திட்டி பேருந்தை எட்டி உதைத்துள்ளார். இந்நிலையில், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படவே போலீசார், விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.