2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்க கனிமொழி தலைமையிலான குழுவை திமுக அமைத்துள்ளது..
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..
திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.. எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.. நாம் தமிழர் தனியாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.. தவெக தலைமையில் ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் இணைந்து கூட்டணி உருவாகும் என்று கூறப்படுகிறது.. பாமக, தேமுக இன்னும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை..
ஆளுங்கட்சியான திமுக ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.. என் வாக்குச்சாவடி, வெற்றிவாக்குச்சாவடி போன்ற முன்னெடுப்புகளை அக்கட்சி தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்க கனிமொழி தலைமையிலான குழுவை திமுக அமைத்துள்ளது.. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு அறிவிக்கப்பட்டுள்ளது.. டி.கே.எஸ் இளங்கோவன், கோவி. செழியன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி ராஜா, அப்துல்லா, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், சந்தானம், சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
12 பேர் கொண்ட இந்த குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து அளிக்கும்.. சங்கங்கள், வணிக அமைப்புகள், மக்களின் கருத்தை பெற்று அந்தந்த தொகுதிகளின் தேவை அறிந்த தேர்தல் அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



